செய்திகள்
கோப்புப்படம்

சென்னை, விழுப்புரம், மதுரையில் இன்று கடும் பனி மூட்டம்

Published On 2021-02-27 09:31 GMT   |   Update On 2021-02-27 09:31 GMT
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை பனி மூட்டமாக காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சென்னை:

தமிழகத்தில் வழக்கமாக மார்கழி மாதத்தில் கடும் பனி மூட்டம் காணப்படும். தை மாதம் பிறந்த பிறகு பனி மூட்டம் படிப்படியாக குறையத் தொடங்கும்.

ஆனால் இந்த ஆண்டு மாசி மாதம் 15-ந் தேதி ஆன நிலையிலும் பனி மூட்டம் இன்னும் குறையவில்லை.

இன்று அதிகாலையில் தமிழகத்தில் பல பகுதி களில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. சென்னை, விழுப்புரம், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இன்று பனி மூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை பனி மூட்டமாக காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதிகாலையில் தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் திணறியபடியே சென்னைக்கு வந்தன.

எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத வகையில் பனி கொட்டிக் கொண்டே இருந்ததால் காலை 6 மணிக்கு பிறகு கூட அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே ஊர்ந்து சென்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. புறவழிச்சாலைபகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால், டிரைவர்களால் வாகனங்களை ஓட்ட முடியவில்லை.

இதனால் அதிகாலையில் ஆங்காங்கே சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டனர். முகப்பு விளக்குகளையும் எரியவிட்டனர். காலை 8 மணிக்கு பிறகே பனிமூட்டம் ஓரளவு விலக தொடங்கியது. அதன் பிறகு வாகனங்களை ஓட்டி சென்றனர்.

மதுரை மாவட்டத்தில் இன்று அதிகாலையில் கடுமையான பனிகொட்டியதால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். பனி மூட்டம் காரணமாக நெடுஞ்சாலையில் குறைந்த அளவிலேயே வாகனங்கள் சென்றன.

வழக்கத்துக்கு மாறாக இந்த பனிப்பொழிவு காணப்பட்டதால் அதிகாலையில் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. 8 மணிக்கு பிறகே நிலைமை ஓரளவு சீரானது.
Tags:    

Similar News