செய்திகள்
புதுச்சேரி சட்டசபை

30 ஆண்டுகளுக்கு பிறகு புதுவையில் ஜனாதிபதி ஆட்சி

Published On 2021-02-25 05:33 GMT   |   Update On 2021-02-25 05:33 GMT
புதுவையில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்து கவிழ்ந்ததால் 30 ஆண்டுக்கு பின் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருகிறது.
புதுச்சேரி:

புதுவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு நடந்து வந்தது.

2 அமைச்சர்கள், காங்கிரஸ்- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ராஜினாமா செய்ததால் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் தமிழிசை உத்தரவிட்டார்.

கடந்த 22-ந் தேதி புதுவை சட்டசபை கூடியது. நீண்ட உரையாற்றிய முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி முன்மொழிந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவகொழுந்து அறிவித்தார். இதன்பின் கவர்னர் தமிழிசையை சந்தித்த நாராயணசாமி, தன் அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இந்த கடிதத்தை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்தார். அமைச்சரவையின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றார். காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து ஆட்சி அமைக்க எதிர்கட்சிகள் கோரவில்லை.

இதனால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கவர்னர் தமிழிசை பரிந்துரை செய்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது. இதில் புதுவையில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இருப்பினும் எந்த தேதியிலிருந்து அமலாகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என தெரிகிறது.

ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதில் 2 வகை உண்டு. ஒன்று சட்டசபையை முடக்குவது. மற்றொன்று சட்டசபையை கலைப்பது. சட்டசபையின் பதவிக்காலம் 2, அல்லது 3 ஆண்டு உள்ளது என்றால் சட்டசபை முடக்கம் செய்யப்படும்.

அரசியல் குழப்பம் தீர்ந்து எந்த கட்சியாவது ஆட்சியமைக்க கோரினால் மீண்டும் உயிர்பிக்க முடியும். பெரும்பான்மை நிரூபிக்க முடியாத நிலையில் தேர்தலுக்கு சில மாதம் உள்ள நிலையில் சட்டசபை கலைக்கப்படும்.

புதுவையில் பெரும்பான்மை நிரூபிக்க யாரும் முன்வரவில்லை. தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகும் என்பதால் சட்டசபையை கலைத்த பின்னரே ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும்.

இதுகுறித்து மத்திய மந்திரி பிரகாஷ்ஜவடேகர் டெல்லியில் கூறியதாவது:-

புதுவையில் யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. ஜனாதிபதி ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரைத்தார். இதற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின் சட்டசபை கலைக்கப்படுவதுடன் நிர்வாகத்துக்கு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சட்டசபை கலைக்கப்பட்டால் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவிகளை இழக்க நேரிடும். புதுவையில் 1991 மார்ச் 4-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன் பின் 6 முறை ஆட்சி அமைந்துள்ளது.

இதில் 3 ஆட்சியில் முதல்-அமைச்சர் மாற்றம் இருந்தது. இருப்பினும் ஆட்சி கவிழவில்லை. தற்போது காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்து கவிழ்ந்ததால் 30 ஆண்டுக்கு பின் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருகிறது. இதற்கு முன் 6 முறை ஜனாதிபதி ஆட்சி இருந்துள்ளது. தற்போது 7-வது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுகிறது.

Tags:    

Similar News