செய்திகள்
உணவு பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டதை காணலாம்

சத்துணவு வழங்கும் திட்டத்தின் கீழ் நீலகிரி முன்னோடி மாவட்டமாக தேர்வு- கலெக்டர் தகவல்

Published On 2021-02-19 09:10 GMT   |   Update On 2021-02-19 09:10 GMT
சத்துணவு வழங்கும் திட்டத்தின் கீழ் நீலகிரி முன்னோடி மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் பயனாளி ஒருவருக்கு இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், பழங்குடியின பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய சத்துணவு வழங்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சி கோத்தகிரி அருகே கரிக்கையூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பாரம்பரிய சத்துணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரியில் பழங்குடியின மக்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

போஷான் அபியான் திட்டத்தின் (சத்துணவு வழங்கும் திட்டம்) கீழ் நீலகிரி மாவட்டம் முன்னோடி மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 6 மாதங்களுக்கு சத்தான உணவு பொருட்கள் வழங்கப்பட்டதன் மூலம் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் எடை அதிகரித்து பயனடைந்தனர். தற்போது கரிக்கையூர் பகுதியில் உள்ள பழங்குடியின பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சத்தான உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது.

அரகோடு மற்றும் ஸ்ரீமதுரை ஊராட்சிகளில் தலா 5 கிராமங்கள் என மொத்தம் 10 கிராமங்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு வசிக்கும் மக்களுக்கு சத்து அதிகம் உள்ள பொருட்களான 2 கிலோ ராகி மற்றும் தலா ஒருகிலோ தினை, சாமை, கம்பு, நிலக்கடலை அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் 664 பேர் பயனடைவார்கள். சுகாதாரத்துறை மூலம் பழங்குடியின கிராமங்களில் வசிக்கும் கர்ப்பிணிகளின் எடை, ரத்தத்தின் அளவு, குழந்தைகளின் உயரம், எடை போன்றவை தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கலெக்டர் சத்தான உணவு பொருட்கள் இடம்பெற்ற கண்காட்சியை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். பின்னர் கலெக்டர் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேனாடு, அரகோடு, ஜக்கனாரை ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News