செய்திகள்
மீனவர்களுடன் உரையாடிய ராகுல்

ராகுல் காந்தியிடம் தவறாக மொழிபெயர்த்து கூறினாரா நாராயணசாமி? இணையத்தில் வைரலாகும் வீடியோ

Published On 2021-02-18 03:55 GMT   |   Update On 2021-02-18 07:18 GMT
புதுவையில் ராகுல் காந்தி நடத்திய கலந்துரையாடலின்போது, மீனவ பெண் கூறிய குற்றச்சாட்டை முதல்வர் நாராயணசாமி அப்படியே கூறாமல் பதில் அளிக்கும் வகையில் மாற்றி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி:

புதுச்சேரி வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீனவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மீனவர்களுக்கு ஆதரவாக பேசிய அவர், அடுத்த முறை புதுச்சேரிக்கு வரும்போது, மீனவர்களுடன் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது எப்படி என்பதை பார்ப்பேன். அப்போதுதான் மீனவர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரியும், என்றார். அதன்பின் மீனவர்களின் குறைகள் குறித்து கேட்டார்.

அப்போது பேசிய மீனவ பெண் ஒருவர், ‘எங்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறவே இல்லை. அப்படியேதான் இருக்கிறது. புயலின் போது பல சிரமங்களை எதிர்கொண்டோம். உங்கள் முன்னால் இருக்கும் முதல்வர் நாராயணசாமி கூட எங்களை வந்து சந்திக்கவில்லை’ என்று குறை கூறினார்.

அந்தப் பெண் என்ன கூறுகிறார் என்று ராகுல் காந்தி, தன் அருகில் நின்றிருந்த முதல்வரிடம் கேட்டபோது, ‘அவர் நிவர் புயல் குறித்த தருணங்களை பற்றி பேசுகிறார். நான் அப்போது அவர்களை வந்து சந்தித்து நிவாரணம் வழங்கினேன். அது குறித்து தான் கூறுகிறார்’ என்று நாராயணசாமி  கூறினார்.

அரசு மீதான குற்றச்சாட்டு குறித்து நேரடியாக மொழிபெயர்த்து ராகுல் காந்தியிடம் கூறாமல், ராகுல் காந்தியிடம் மாற்றி கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாஜக தலைவர்கள் பலர் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு நாராயணசாமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 
Tags:    

Similar News