செய்திகள்
மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல்

நீங்கள் கடல் விவசாயிகள்... புதுவை மீனவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி

Published On 2021-02-17 10:07 GMT   |   Update On 2021-02-17 10:07 GMT
மத்தியில் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படவேண்டும் என புதுச்சேரியில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் ராகுல் பேசினார்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசார களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் விலகலால் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி, துணை நிலை ஆளுநர் நீக்கம் என பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று புதுச்சேரி வந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த வரவேற்பைத் தொடர்ந்து முத்தியால்பேட்டையில் மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார் ராகுல்காந்தி. அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு 3 சட்ட மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது. மீனவர்கள் கூட்டத்தில் விவசாயிகள் பற்றி நான் ஏன் பேசுகிறேன்? என உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் உங்களை கடல் விவசாயிகளாக கருதுகிறேன். மத்தியில் நில விவசாயிகளுக்கு அமைச்சகம் இருக்கும்போது, கடல் விவசாயிகளுக்கு ஏன் அவ்வாறு இல்லை? மீனவர்களின் குறைகளை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும். 

அடுத்த முறை புதுச்சேரிக்கு வரும்போது, மீனவர்களுடன் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது எப்படி என்பதை பார்ப்பேன். அப்போதுதான் மீனவர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரியும்.

தற்போதைய அரசாங்கம் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. ஏனெனில் அனைத்து தொழில்களும் பெரிய நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். எங்கள் பார்வை வேறு. சிறு மற்றும் நடுத்தர தொழில்களை வலுப்படுத்த விரும்புகிறோம். ஏனெனில் அதுதான் இந்த நாட்டின் பலம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தியுடன் முதல்வர் நாராயணசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News