செய்திகள்
பெருமுகையில் உள்ள பாலாற்று குட்டையில் வாத்துக்குஞ்சுகள் இறந்து மிதப்பதை காணலாம்.

பெருமுகையில் 7 ஆயிரம் வாத்துக்குஞ்சுகள் திடீர் உயிரிழப்பு

Published On 2021-02-16 16:20 IST   |   Update On 2021-02-16 16:20:00 IST
வேலூரை அடுத்த பெருமுகையில் 7 ஆயிரம் வாத்துக்குஞ்சுகள் திடீரென இறந்தன. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.
வேலூர்:

காட்பாடி சஞ்சீவிராயபுரத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 38). இவர் சத்துவாச்சாரியை அடுத்த பெருமுகை பகுதியில் பாலாற்றங்கரையோரம் கொட்டகை அமைத்து வாத்துக்குஞ்சுகளை வளர்த்து வருகிறார். வாத்துகள் வளர்ந்த பின்னர் ஜார்க்கண்ட், கேரளா மாநிலங்களில் விற்பனை செய்வார்.

தினமும் வாத்துக் குஞ்சுகளுக்கு காலையில் தீவனம் அளித்து அருகிலுள்ள பாலாற்று குட்டையில் விடுவார். இந்தநிலையில் நேற்று காலையிலும் வழக்கம் போல குஞ்சுகளுக்கு தீவனம் அளித்து பின்னர் குட்டையில் விட்டார்.

சிறிது நேரம் கழித்து குஞ்சுகள் ஒன்றன்பின் ஒன்றாக மயக்கமடைந்து இறந்தன. அவர் வளர்த்து வந்த சுமார் 7 ஆயிரம் வாத்துக் குஞ்சுகளும் நீரில் செத்து மிதந்தது. இதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் கால்நடை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வாத்துக் குஞ்சுகள் குடித்த குட்டை நீர், தீவனம் மற்றும் மருந்துகளின் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.

இதுகுறித்து சுதாகர் கூறுகையில், வாத்துக் குஞ்சுகளை ஆந்திர மாநிலம் சிங்கராயகொண்டம் பகுதியிலிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாங்கி வந்தேன். தினமும் குஞ்சுகளுக்கு தீவனம் அளித்து பின்னர் அருகில் உள்ள குட்டையில் விடுவேன். இந்த நிலையில் தண்ணீர் குடித்த குஞ்சுகள் அனைத்தும் திடீரென உயிரிழந்து விட்டன. இதனால் பல லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

கால்நடைத்துறை இணை இயக்குனர் நவநீத கிருஷ்ணன் கூறுகையில், திடீரென குஞ்சுகள் இறந்ததால் நீரில் மாசு ஏற்பட்டு விஷமாக மாறி இருக்கலாம். அல்லது எலிகளை கொல்ல பயன்படுத்தப்படும் மருந்து கலந்திருக்கலாம். மருந்து சாப்பிட்ட எலிகளை பறவைகள் தூக்கி குட்டையில் போட்டிருக்கலாம். பறவை காய்ச்சலுக்கான வாய்ப்புகள் இல்லை.

ஏனெனில் குட்டையில் மட்டும் வாத்துக்குஞ்சுகள் இறந்திருக்கிறது. நிலத்தில் உள்ள பிற குஞ்சுகள் நன்றாக உள்ளது. வேறு காரணங்கள் உள்ளதா? என ஆய்வு செய்யப்படுகிறது. பிற கால்நடைகளை அந்த தண்ணீரை குடிக்கவைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Similar News