செய்திகள்
ரங்கசாமி

காங்கிரஸ் அரசு பதவி விலக வேண்டும்- எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி வலியுறுத்தல்

Published On 2021-02-16 10:09 GMT   |   Update On 2021-02-16 10:35 GMT
பெரும்பான்மையை இழந்த காங்கிரஸ் அரசு பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவையில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதை தொடர்ந்து எதிர்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

புதுவை சட்டசபை வளாகத்தில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரிமணிகண்டன், பாஸ்கர், மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் ஆகியோர் வந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், எம்.எல்.ஏ. செல்வகணபதி, ஏம்பலம் செல்வம் ஆகியோரும் வந்தனர்.

இதன்பின் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் வந்தனர். சிறிது நேரம் அ.தி.மு.க. அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். பின்னர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். போதிய எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லாததால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது. தானாக முன்வந்து காங்கிரஸ் அரசு பதவி விலக வேண்டும். இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த அரசும் பதவி விலக வேண்டும்.

இந்த அரசு பதவி விலகாவிட்டால் எதிர்கட்சியினர் விவாதித்து முடிவெடுப்போம். ஒரு நிமிடம் கூட இந்த அரசு நீடிக்க முடியாது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தானாக முன்வந்து பதவி விலகுகின்றனர். இந்த ஆட்சி மீது அவர்களுக்கே அதிருப்தி உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களே புறக்கணிக்கப்படுகின்றனர்.

கடந்த 3 ஆண்டாக எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கூட தரவில்லை. முதல்-அமைச்சர் நாராயணசாமி எதற்கும் ஒத்துழைப்பு தருவதில்லை.

இந்த ஆட்சி மிகவும் மோசமான அரசு. ஆள்வதற்கு லாயக்கற்ற அரசு. நாராயணசாமியின் முடியாது என்பதை எப்போதும் ஒப்புக் கொள்ள மாட்டார். மற்றவர்கள் மீது பழிபோடுவார். ஆட்சியின் செயல்பாடுகளை எதிர்கட்சியினர் எப்படி தடுக்க முடியும். எதிர்கட்சிகள் செயல்பட விடுவதில்லை என எங்கள் மீது குற்றம் சாட்டுவார்.

கவர்னர் மீது குற்றம் சாட்டுவார். திடீரென வாக்குறுதிகளை 85 சதவீதம் நிறைவேற்றியதாக கூறுவார். முரண்பட்ட கருத்துக்களை கூறுவது அவர் வழக்கம். அவர்கள் அளித்த வாக்குறுதிகளை கூட செயல்படுத்த முடிய வில்லை.

மோசமான நிலையில் புதுவை உள்ளது. ஒரு திட்டத்தைக்கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ரங்கசாமியிடம் ஆட்சி அமைக்க நீங்கள் உரிமை கோருவீர்களா? என நிருபர்கள் கேட்டபோது, முதலில் அவர்கள் பதவி விலகட்டும், பின்னர் பேசலாம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News