செய்திகள்
பயிற்சி முகாமில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியபோது எடுத்தபடம்.

வங்கி வளர்ச்சிக்கு மகளிர் சுய உதவிக் குழுவின் பங்கு முக்கியம் - கலெக்டர் சண்முகசுந்தரம் பேச்சு

Published On 2021-02-12 11:18 GMT   |   Update On 2021-02-12 11:18 GMT
வங்கி வளர்ச்சிக்கு மகளிர் சுய உதவிக் குழுவின் பங்கு முக்கியம் என கலெக்டர் சண்முகசுந்தரம் பேசினார்.
வேலூர்:

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் வேலூர் ஏலகிரி வளாகத்தில் வங்கி மேலாளர்கள், வங்கி செயலாளர்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் அளிப்பது தொடர்பான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சிவராமன் வரவேற்றார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியோடர்தியஸ் திட்ட விளக்க உரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது:-

கல்வி மற்றும் பொருளாதாரம் கிடைக்கப்பெற்ற பெண்கள் மிகவும் பாக்கியசாலிகள். இதன்மூலம் பெண்களுக்கு தன்னம்பிக்கை வளர்கிறது. கிராமப் பெண்களும் திறமையை வெளிக்காட்ட மகளிர் சுய உதவி குழு உதவுகிறது. பெண்களின் முன்னேற்றம் சமுதாய வளர்ச்சியாகும். பெண்களுக்கு கல்வியறிவு கிடைத்தால் நாட்டின் வளர்ச்சி கிடைத்த மாதிரி. ஆண்களுக்கு இணையாக பெண்களின் கல்வித்தரம் உயர்ந்து வருகிறது.

பள்ளி பொதுத்தேர்வுகளில் பெண்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. பெண்களுக்கான பொருளாதார இடைவெளியை உடைத்தெறிய வேண்டும். கிராமப்புற தொழிலை பலர் இணைந்து செய்யும் போது அந்த தொழில் அதிகரிக்கிறது. உங்களில் பலர் குழுக்களாக சேர்ந்து சாதிக்க முடியும். இணைந்து செயல்பட்டால்தான் தலைமைப்பண்பு அதிகரிக்கும்.

உங்களின் திறமையும் அதிகரிக்கும். ஆண்களை சார்ந்து வாழும் வாழ்க்கையில் இருந்து விலகி மெல்ல மெல்ல தனித்து செயல்பட உதவுகிறது. பெரிய நிறுவனங்கள் கடன் வாங்கி செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள். வங்கியின் வளர்ச்சிக்கு பெரும் முதுகெலும்பாக உள்ளீர்கள்.

அழிந்துவரும் கிராமப்புற தொழில்களை மீட்டெடுத்து ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுவின் பங்கு வங்கிகளின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கிறது. அதே போல வங்கிகளில் பெறும் கடன்களை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சிறப்பான முறையில் உரிய நேரத்தில் வட்டி மற்றும் அசல் தொகையுடன் திருப்பி செலுத்தி மீண்டும், மீண்டும் கடன் பெற்று தங்களை பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உயர்த்திக்கொள்ள இது வாய்ப்பாக அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் உதவி மகளிர் திட்டஅலுவலர்கள் ஜெயகாந்தன், வெங்கடேசன் மற்றும் வங்கி மேலாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News