செய்திகள்
கார்-லாரி நேருக்கு நேர் மோதல்: வங்கி ஊழியர்கள் 2 பேர் பலி
விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மந்தாரக்குப்பம்:
மதுரை கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன் மகன் அஜய்கார்த்திக்(வயது 31). இவர் கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதற்காக இவர் நெய்வேலி அடுத்த கெங்கைகொண்டான் பஸ் நிறுத்தம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். அஜய்கார்த்திக் நேற்று முன்தினம் பணி முடிந்ததும் தன்னுடன் பணியாற்றும் சக ஊழியரான மந்தாரக்குப்பம் அடுத்த மேல்பாதி கிராமத்தை சேர்ந்த ரகுவரன்(33), ரகுவரன் அண்ணன் ரங்கநாதன்(36) ஆகியோருடன் சொந்த வேலை காரணமாக ஒரு காரில் வடலூர் சென்றார்.
பின்னர் அங்கு வேலை முடிந்ததும் இரவு 11.45 மணியளவில் அஜய்கார்த்திக் உள்ளிட்ட 3 பேரும் காரில் மந்தாரக்குப்பம் நோக்கி புறப்பட்டனர். கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நெய்வேலி அடுத்த சேப்ளாநத்தம் கிராம எல்லை அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியும், அஜய்கார்த்திக் உள்ளிட்டோர் வந்த காரும் கண்இமைக்கும் நேரத்தில் நேருக்குநேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் அஜய்கார்த்திக், ரகுவரன் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.