செய்திகள்
அதிகாரிகளுடன், பயனாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வாங்க ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு

Published On 2021-02-11 16:10 IST   |   Update On 2021-02-11 16:10:00 IST
கலெக்டர் அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வாங்க ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து விடுபட்டவர்கள் மட்டும் தாலிக்கு தங்கம் வாங்க விண்ணப்பித்த தகுதியான காட்பாடி, கணியம்பாடி, அணைக்கட்டு ஒன்றியங்களை சேர்ந்த 592 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்படும் என சமூகநல அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைப் பெறுவதற்காக அறிவித்தபடி நேற்று காலை 7.30 மணி அளவில் அணைக்கட்டு, காட்பாடி, கணியம்பாடி பகுதிகளில் இருந்து ஏராளமான பயனாளிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

காலை 10 மணி அளவில் 500-க்கும் மேற்பட்டோர் காயிதே மில்லத் அரங்கம் அருகே குவிந்ததால் அங்கு திடீரென சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் டோக்கன் பெறுவதற்கு அங்கிருந்தவர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அருகில் உள்ள மற்றொரு அரங்கில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனால் அங்கு அவர்கள் சென்று கும்பலாக நின்றனர்.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து கும்பலாக கூடி இருந்தவர்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து டோக்கன் வழங்கினர். பின்னர் அவர்களுக்கு சமூகநலத்துறை அலுவலர் முருகேஸ்வரி தங்கம் வழங்கினார்.

பயனாளர்கள் வரிசைப் பதிவேட்டில் சில பிரச்சினைகள் இருந்தது. இதனால் அவர்களுக்கு தங்கம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

ஏற்கனவே தங்கம் பெறாமல் அணைக்கடு ஒன்றியத்தில் 146 பேரும், கணியம்பாடியில் 17 பேரும் இருந்தனர். அர்களுக்கும், காட்பாடி ஒன்றியத்தில் உள்ளவர்களுக்கு என 592 பேருக்கு தங்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தங்கம் பெற பயனாளிகள் மட்டும் வராமல் உடன் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து வந்தனர். இதனால் கூட்டம் அதிகமாக இருந்தது.

பெயர் மற்றும் வங்கிகணக்கு எண்ணில் சில முரண்கள் இருந்தது. இதனால் சிலருக்கு உடனடியாக தங்கம் கொடுக்க முடியவில்லை. அவை அனைத்தும் சரிபார்த்து பின்னர் வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொதுமக்கள் கூறுகையில், தங்கம் பெற ஏராளமானவர்கள் வருவார்கள் என அதிகாரிகளுக்கு தெரியும். எனவே அவர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வந்தவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையும் பின்பற்றவில்லை. பயனாளிகள் கடும் அவதிப்பட்டனர் என்றனர்.

Similar News