செய்திகள்
மணிகண்டன்- அஜித்குமார்

கடலூரில் நூதன முறையில் டிரைவரிடம் கார் திருடிய 2 பேர் கைது

Published On 2021-02-09 18:58 IST   |   Update On 2021-02-09 18:58:00 IST
கடலூரில், நூதன முறையில் கார் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர்:

வடலூர் ஆபத்தாரணபுரம் கோவிந்தசாமிநகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் ரவி (வயது 47). இவர் வடலூர் கார் நிறுத்தத்தில் வாடகை கார் ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் 1.45 மணி அளவில் ரவியிடம் விருத்தாசலம் பள்ளத்தெரு கார்கூடலை சேர்ந்த பழனிவேல் மகன் மணிகண்டன் என்கிற கதிரேசன் (23) என்பவர் புதுச்சேரிக்கு சவாரி செல்ல வேண்டும் என்று வாடகை பேசி அவரை அழைத்து வந்தார்.

கார் கடலூர் வந்த போது, இம்பீரியல் சாலையில் உள்ள பிரபல ஓட்டலில் 2 பேரும் சாப்பிட்டனர். பின்னர் மணிகண்டன் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார். ரவி மட்டும் தாமதமாக சாப்பிட்டார். இதனால் அவரிடம் தான் சாப்பிட்ட சாப்பாட்டுக்கும், அவருக்கும் சேர்த்து பணத்தை கொடுத்து விட்டு, நான் காரில் காத்து இருக்கிறேன். இதனால் உனது கார் சாவியையும், யூடியூப் பார்க்க உனது செல்போனையும் தா? என்று நைசாக பேசி வாங்கினார்.

இதை நம்பிய ரவி, அவரிடம் சாவியையும், செல்போனையும் கொடுத்து அனுப்பினார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, காரையும், அவரையும் காணவில்லை. அதன்பிறகு தான் அவர் தனது காரை திருடிச்சென்றது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி இது பற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மேற்பார்வையில் திருப்பாதிரிப்புலியூர் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான தனிப்படையினர் அவரை தீவிரமாக தேடினர்.

இந்நிலையில் அவர் காருடன் நேற்று மதியம் சேத்தியாத்தோப்பு பகுதியில் வலம் வந்தது போலீசாருக்கு தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அப்போது அவருடன் அவரது நண்பர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பெருமாத்தூர் காமராஜ் மகன் அஜித்குமார் (24) என்பவரும் இருந்தார். இதையடுத்து 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர்கள் 2 பேரும் சேர்ந்து திட்டமிட்டு காரை திருடிச்சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இ்ருந்த காரையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் 2 பேர் மீதும் பரங்கிப்பேட்டை, குன்னம் ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் நூதன முறையில் டிரைவரிடம் கார் திருடிய சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News