செய்திகள்
துரைமுருகன்

7 பேர் விடுதலையில் மத்திய அரசு நாடகம் ஆடுகிறது- துரைமுருகன் பேட்டி

Published On 2021-02-05 23:47 GMT   |   Update On 2021-02-05 23:47 GMT
7 பேர் விடுதலையில் மத்திய அரசு நாடகம் ஆடுகிறது என வேலூரில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
வேலூர்:

வேலூரில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு வக்கீலும், உச்ச நீதிமன்றமும், ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரை கவர்னர் விடுவிக்க அதிகாரம் உண்டு என கூறிய பிறகும் அந்த அதிகாரம் எனக்கு இல்லை என தமிழக கவர்னர் கூறுவது ஏற்புடையது அல்ல.

மாநில அரசு அமைச்சரவையை கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால் அதை கவர்னர் 100 சதவீதம் அல்லது 99 சதவீதம் நிறைவேற்றுவதுதான் வழக்கம். ஆனால் இந்த கவர்னர் வித்தியாசமானவராக உள்ளார். அ.தி.மு.க. அமைச்சர்களை மதிப்பது போன்றும், மதிக்காதது போன்றும் உள்ளார்.

2 நாட்களுக்கு முன் முதல்-அமைச்சர், கவர்னரை சந்தித்தபோது 7 பேர் விடுதலை குறித்து பார்க்கலாம் என கூறியிருக்கிறார். கவர்னர் தற்போதைய முடிவை முதல் -அமைச்சரிடம் கூறியிருக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் பலமாக கவர்னரையே கண்டிக்க வேண்டும். முதல்- அமைச்சரிடத்திலேயே மறைத்து பேசுவது அவருக்கு சரியல்ல.

கோர்ட்டு கூறியதற்கு பிறகும் நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இதன் சூத்திரதாரி யார்? என மக்கள் அறிய வேண்டும். மத்திய அரசு நாடகம் ஆடுகிறது. ஆனால் தி.மு.க. நாடகம் ஆடுவதாக இப்போது கூறுபவர் ஏன்? இத்தனை நாட்களாக கூறவில்லை.

இப்போதாவது ஜனாதிபதி வாயை திறந்து எனக்கு தான் அதிகாரம் உள்ளது அல்லது, கவர்னருக்கு தான் அதிகாரம் உள்ளது என பதில் கூற வேண்டும். பல நேரங்களில் மவுனம் காத்து பிரச்சினைகளுக்கு மோசடி வேலை செய்கிறார்கள்.

இதில் சுப்ரீம் கோர்ட்டு என்ன நினைக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே முதல்-அமைச்சர், அவர்களது கட்சி விவகாரத்தில் கலங்கிபோய் உள்ளார்.

மத்திய பட்ஜெட்டை பார்க்கும் போது இன்னும் கொஞ்ச நாளில் ஜனநாயகம் இருக்காது, கட்சிகள், சட்டமன்றம், நாடாளுமன்றம் இருக்காது. ஆக ஒரேநாடு, ஒரேமொழி, ஒரே இந்தியா என்ற அசோகர் கால, அரசர் கால ஆட்சியை உருவாக்க பார்க்கிறார்கள். பட்ஜெட்டில் நிதியை ஒதுக்குகிறார்களே தவிர கொடுத்ததாக தெரியவில்லை.

இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெளிநாட்டு பிரபலங்கள் ஏன்? கருத்து சொல்லக்கூடாது. இன்றைக்கு உலகம் சுருங்கிப்போய் உள்ளது. உலக நாட்டில் எந்த பிரச்சினை நடந்தாலும் கருத்து தெரிவிக்கலாம். அந்த வகையில் விவசாயிகள் பிரச்சினையில் ஏன்? வெளி நாட்டினர் கருத்து தெரிவிக்க கூடாது. கருத்து தெரிவிப்பது தவறில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News