செய்திகள்
கைது

நசரத்பேட்டை அருகே லாரி டிரைவரை கடத்தியதாக மதபோதகர் உள்பட 4 பேர் கைது

Published On 2021-02-03 18:51 IST   |   Update On 2021-02-03 18:51:00 IST
நசரத்பேட்டை அருகே லாரி டிரைவரை கடத்தியதாக மதபோதகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பூந்தமல்லி:

வியாசர்பாடியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 53). அந்த பகுதியில் கிறிஸ்தவ சபை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலை நசரத்பேட்டை அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அருகே வந்த லாரி காரின் மீது உரசியதில் காரில் லேசாக சேதம் ஏற்பட்டது. இதையடுத்து லாரி டிரைவர் மணிகண்டன் தனது உரிமையாளரிடம் பேசிவிட்டு இழப்பீடாக ரூ.3 ஆயிரம் கொடுத்ததாகவும் அதனை அவர்கள் வாங்காமல் மாதவரத்தில் உள்ள கார் பழுது பார்க்கும் இடத்துக்கு வந்து செலவு ஆகும் தொகையை தருமாறு கூறினர்.

மணிகண்டனை அழைத்து சென்றவர்கள் வியாசர்பாடிக்கு அழைத்து சென்று ரூ.30 ஆயிரம் கொடுத்தால்தான் மணிகண்டனை விடுவிக்க முடியும் என மோகன்தாஸ் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மணிகண்டனை கடத்தி சென்று விட்டதாக லாரி உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மணிகண்டனை மீட்டனர். மேலும் போதகர் மோகன்தாஸ் அவரது டிரைவர் மற்றும் நண்பர்களான ஐசக், ஜீவா, அன்பு ஆகியோரை கைது செய்து நசரத்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் 4 பேர் மீதும் ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது அங்கு கூடியிருந்த 50-க்கும் மேற்பட்டோர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். 

Similar News