செய்திகள்
சிவகங்கை நகரில் லாரி, கார் திருடிய 2 பேர் கைது
சிவகங்கை நகரில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடு போன லாரி, கார், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை நகரில் கடந்த ஜனவரி மாதம் பஸ்நிலையம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தபட்டிருந்த கார் ஒன்று திருடு போனது. இது போல் சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் உள்ள அழகு நிலையம் ஒன்றின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், தொண்டி ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றும் திருடு போனது.
அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்களை தொடர்ந்து சிவகங்கை நகர் குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் மீனுப்பிரியா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலைசெல்வன், மருதுபாண்டி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன், வெள்ளைச்சாமி, ஏட்டு பெத்தணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் தொடர் வாகன திருட்டு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வசிக்கும் விஜய் என்ற விஜயன் (வயது 30), ராமநாதபுரத்தை அடுத்த வாலாந்தரவையை சேர்ந்த சரவணன் (24) ஆகிய 2 பேர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடு போன லாரி, கார் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கைதான 2 பேர் மீதும் ஏற்கனவே மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், சிவகங்கை, பரமக்குடி, உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேரையும் பிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.