செய்திகள்
கோப்புபடம்

சாலைகளை சீரமைக்க கோரி முற்றுகை போராட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவிப்பு

Published On 2021-01-25 14:51 GMT   |   Update On 2021-01-25 14:51 GMT
சிவகாசி நகரம் முழுவதும் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலைகளை உடனே சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நகராட்சி அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி:

சிவகாசி நகராட்சி பகுதியில் வசிப்பவர்களுக்கு மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது போதாத நிலையில் மேலும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் வினியோகம் செய்ய தேவையான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதியிலும் சாலைகளில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பள்ளம் தோண்டி அதில் பணியாளர்கள் குழாய்களை பதித்து வருகிறார்கள்.

இதற்காக தோண்டப்பட்ட பல இடங்களில் சாலைகள் அனைத்தும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி விழும் நிலை தொடர்கிறது.

இந்த நிலையில் சிவகாசி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நகராட்சி பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலைகளை உடனே சீரமைக்கவில்லை என்றால் மக்களை திரட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று அக்கட்சியினர் துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருகிறார்கள்.

இதே போல் சிவகாசி ரெயில் நிலையம் அருகில் உள்ள சிவகாசி எஸ்.என்.புரம்சாலை கடந்த 6 மாதங்களாக மிகவும் மோசமாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

லேசான மழை பெய்தால் கூட தண்ணீர் வெளியேற போதிய வசதி இல்லாத இந்த பகுதியில் மழை நீர் தெப்பகுளம் போல் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் வாருகால் அமைத்து புதிய சாலை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு தெரிவித்து கையெழுத்து போட்டனர்.

Tags:    

Similar News