செய்திகள்
ரேலியா அணை நிரம்பி உள்ளதை படத்தில் காணலாம்.

குன்னூர் அருகே தொடர் மழையால் ரேலியா அணை நிரம்பியது - உபரிநீர் வீணாகுவதை தடுக்க கோரிக்கை

Published On 2021-01-23 13:51 GMT   |   Update On 2021-01-23 13:51 GMT
குன்னூர் அருகே தொடர் மழையால் ரேலியா அணை நிரம்பியது. உபரிநீர் வீணாகுவதை தடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
குன்னூர்:

குன்னூர் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ரேலியா அணை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையின் மொத்த கொள்ளளவு 43.7 அடி உயரம் ஆகும். இந்த அணையில் இருந்து குன்னூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக அணை நிரம்பி வழிந்தது. பின்னர் அங்கிருந்து குடிநீருக்கு தண்ணீர் எடுக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது.

இந்த நிலையில் குன்னூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதையடுத்து அணை நிரம்பியது. இதனால் உபரிநீர் மதகு வழியாக வழிந்து ஆற்றில் வீணாக கலக்கிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது,தற்போது அணை நிரம்பி உபரிநீர் ஆற்றில் வீணாக செல்கிறது. இதை தடுத்து ஆங்காங்கே தடுப்பணை கட்டி அதில் இருந்து குடிநீர் எடுத்து வினியோகம் செய்ய கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அணையில் தண்ணீர் முழுவதும் இருக்கும் போதாவது 3 நாட்களுக்கு ஒருமுறை சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News