செய்திகள்
மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணி நடந்து வருவதை படத்தில் காணலாம்.

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சாலையில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் பணி தொடக்கம்

Published On 2021-01-23 13:30 GMT   |   Update On 2021-01-23 13:30 GMT
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சாலையில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
குன்னூர்:

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் இங்கு பரவலாக மழை பெய்து வருவதால், இந்த சாலையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்படும் அபாய நிலை இருந்தது. இதனால் மழை நின்றதும் சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கியது. அப்போது சாலையின் ஒரு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு விரிசல் அடைந்தது. இதனால் அகலப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டது. அத்துடன் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அங்கு கான்கிரீட் போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் 10 நாட்களுக்குள் முடிக்க முடிவு செய்து, அதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, சாலை விரிசல் காரணமாக கனரக வாகனங்கள் கோத்தகிரி வழியாக செல்ல அறிவிக்கபட்டு உள்ளது. ஆனால் சில வாகனங்கள் விதிமுறையை மீறி குன்னூர் வழியாக சென்று வருவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தடையை மீறி செல்லும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News