செய்திகள்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் செடிகளை சுற்றிலும் கோத்தாரி செடிகள் வைக்கப்பட்டுள்ளதை காணலாம்

பூங்காக்களில் மலர் செடிகளை பாதுகாக்க முன்னேற்பாடுகள் தீவிரம்

Published On 2021-01-20 03:37 GMT   |   Update On 2021-01-20 03:37 GMT
உறைபனியால் கருகாமல் இருக்க ஊட்டி பூங்காக்களில் மலர் செடிகளை பாதுகாக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஊட்டி:

மலைப்பிரதேசமான ஊட்டியில் உறைபனி தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் பகலில் வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது. குறிப்பாக அதிகாலை, மாலை, இரவு நேரங்களில் கடும் குளிர் காணப்படுகிறது. உறைபனி தாக்கத்தால் மலர் செடிகள், அலங்கார செடிகள், காய்கறி பயிர்கள் கருகுவதை தடுக்கவும், பாதுகாப்பாக வைக்கவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை ஒட்டி மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி நடந்து வருகின்றது. சிறிய குட்டைகளை சுற்றி மற்றும் மலர் பாத்திகளில் நடவு செய்யும் மலர் நாற்றுகள் உறைபனியால் பாதிக்காமல் இருக்க சுற்றிலும் கோத்தாரி செடிகள் ஊன்றப்படுகிறது. இதன் மூலம் மலர் நாற்றுகளுக்கு பகலில் நிழல் கிடைக்கும். பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட டெல்பீனியம், சால்வியா உள்ளிட்ட மலர் செடிகள் கோத்தாரி செடிகள் கொண்டு சுற்றிலும் மூடப்பட்டு இருக்கிறது.

இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பூங்கா முன்பகுதியில் உள்ள அலங்கார செடிகள் நிழல் வலை கொண்டு மூடப்படுகிறது. பகல் நேரங்களில் புல்வெளிகள் மற்றும் மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. குறிப்பாக அதிகாலையில் புற்களில் காணப்படும் உறைபனியால் கருகுவதை தவிர்க்க ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

அதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபாதையின் இருபுறங்களிலும் உள்ள அலங்கார செடிகள் கருகாமல் இருக்க கோத்தாரி செடிகள் கொண்டு மூடப்பட்டு உள்ளது. தேயிலை பூங்காவில் மலர் செடிகள் மற்றும் அலங்கார செடிகள் நிழல் வலைகள் கொண்டு பாதுகாக்கப்பட்டு உள்ளது. அங்கு உற்பத்தி செய்யப்படும் மலர் நாற்றுகளுக்கும் நிழல் வலைகள் போடப்பட்டு இருக்கிறது.

கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

உறைபனி தாக்கத்தால் மலர் செடிகள் மற்றும் பயிர்களை பாதுகாக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 16.1 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 6.2 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது. சில இடங்களில் நீர் பனியும், உறைபனியும் காணப்பட்டது.
Tags:    

Similar News