செய்திகள்
வனவிலங்கு கணக்கெடுப்புக்காக கண்காணிப்பு கேமராவை வனத்துறையினர் பொருத்திய காட்சி.

முதுமலை வெளிமண்டல பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

Published On 2021-01-18 05:56 GMT   |   Update On 2021-01-18 05:56 GMT
முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல பகுதிகளில் 400 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தை புலி, கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன்பு மற்றும் அதற்கு பிந்தைய கால கட்டங்களில் வனத்துறையினர் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம். இதேபோல் புலிகள் கணக்கெடுக்கும் பணியிலும் வனத்துறையினர் தனியாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த நவம்பர் மாத இறுதியில் புலிகள் காப்பகத்தின் உள் மண்டல பகுதியான முதுமலை, தெப்பக்காடு, கார்குடி உள்ளிட்ட வனச்சரக பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி ஒரு வாரத்துக்கும் மேலாக புலிகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து புலிகள் காப்பகத்தின் வெளி மண்டல பகுதியான சிங்காரா, சீகூர், தெங்குமரஹாடா உள்ளிட்ட வனச்சரக ங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணியை வனத்துறையினர் நேற்று தொடங்கினர்.

இதற்காக சிங்காரா, சீகூர், தெங்குமரஹாடா உள்ளிட்ட வனப்பகுதிகளில் சுமார் 200 இடங்களில் 400 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிங்கார வனச்சரகர் காந்தி தலைமையில் சுமார் 100 வன ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் கேமராக்களை பொருத்திய பின்னர் அதில் உருவங்கள் பதிவு ஆகிறதா என வனவிலங்கு போல் நடந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இப்பணி 2 நாட்களில் முடிவடையும் என கூறப்படுகிறது. தொடர்ந்து 1 வாரம் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமராக்கள் பதிவு செய்யும். அதன் பின்னர் எந்தெந்த இடங்களில் புலி நடமாட்டம் உள்ளது என வனத்துறையினர் ஆராய்ந்து எத்தனை புலிகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளது என கணக்கிட உள்ளனர்.
Tags:    

Similar News