செய்திகள்
எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம்

ஜெயலலிதா நினைவிடத்தை 27-ந்தேதி திறக்க திட்டம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் விழா

Published On 2021-01-13 10:08 GMT   |   Update On 2021-01-13 10:08 GMT
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறுகிறது. நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
சென்னை:

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார்.

அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் பிரமாண்ட நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

பீனிக்ஸ் பறவை போன்ற வித்தியாசமான தோற்றத்தில் நினைவிடத்தை அமைக்க வடிவமைப்பு செய்யப்பட்டது. இதன் அடிக்கல் நாட்டு விழா 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந்தேதி நடந்தது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். உடனடியாக கட்டுமானப்பணிகள் தொடங்கின.

எம்.ஜி.ஆர். சமாதி 9 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகும். இதில் ஜெயலலிதா நினைவிடம் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது.

இத்துடன் எம்.ஜி.ஆர். சமாதி முழுவதும் புதுப்பிக்கப்பட்டு கட்டுமான பணிகளும் செய்யப்பட்டன. ஜெயலலிதா நினைவிடத்தை சுற்றி பூங்கா, புல்வெளி, நீர் தடாகங்கள் அமைக்கப்பட்டன. ஒட்டு மொத்த கட்டுமான பணிகளுக்கு ரூ.79 கோடியே 75 லட்சம் செலவிடப்பட்டது.

ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்ட பீனிக்ஸ் பறவையின் உயரம் 15 மீட்டர், நீளம் 30 மீட்டர், அகலம் 43 மீட்டர் இதற்கான இறகுகள் துபாயில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்து கொண்டு வரப்பட்டன.

நினைவிடத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்காக 500 டன் இரும்பு, 1,068 கியூபிக் மீட்டர் கான்கிரீட், நினைவிட சிறப்பு கட்டுமானத்துக்கு 300 டன் இரும்பு, 800 கியூபிக் மீட்டர் கான்கிரீட் பயன்படுத்தப்பட்டது.

பூங்காவுக்கான அலங்கார செடிகள் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டன. தற்போது கட்டுமானப் பணிகள் முழுமை அடைந்துள்ளன. அதன் இறுதி கட்ட நிறைவு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இதையடுத்து நினைவிடத்தை திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கான தேதியை முடிவு செய்வதற்கு ஆலோசனை நடந்து வருகிறது.

வருகிற 26-ந்தேதி அல்லது 27-ந்தேதி நினைவிடத்தை திறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 27-ந்தேதி முகூர்த்த நாளாகும். எனவே அன்றைய தினமே திறக்கலாம் என்று திட்டமிட்டுள்ளார்கள்.

ஒருவேளை அன்றைய தேதியில் திறப்பு விழா நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் பிப்ரவரி முதல் வாரத்தில் திறக்கலாம் என்ற திட்டமும் இருக்கிறது. ஓரிரு நாளில் இது சம்பந்தமாக இறுதி முடிவு எடுக்கிறார்கள்.

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறுகிறது. நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

கட்டுமான பணிகள் முழுமை அடைந்து இருப்பதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திறப்பு விழா அழைப்பிதழை பிரதமர் மோடியிடம் வழங்குவதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 18-ந்தேதி டெல்லி செல்ல உள்ளார். 19-ந்தேதி பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுக்கிறார்.

ஜெயலலிதா நினைவிடம் மிக சிறப்பாக அமைந்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி. நிபுணர்கள் வழிகாட்டுதலுடன் பணிகள் நடந்தன. துபாய் நாட்டு கட்டிடக் கலை நிபுணர்களும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

கட்டுமான பணிகள் முடிந்ததையடுத்து ஐ.ஐ.டி. நிபுணர்கள் ஆய்வு செய்து கட்டுமானங்கள் தரமானதாக இருப்பதாக சான்றிதழ்கள் வழங்கி உள்ளனர்.
Tags:    

Similar News