செய்திகள்
அறந்தாங்கி அருகே விஜயபுரத்தில் தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கி கிடக்கும் பயிர்களை படத்தில் காணலாம்.

தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கி நாசமான நெற்பயிர்கள்

Published On 2021-01-09 17:37 IST   |   Update On 2021-01-09 17:37:00 IST
அறந்தாங்கி பகுதியில் தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் நாசமாயின. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அறந்தாங்கி:

அறந்தாங்கி அருகே விஜயபுரம், கொடிவயல், மங்களநாடு, அரசர்குளம், நாகுடி, இடையார், ஆளப்பிறந்தான் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது, பயிர்கள் விளைச்சலுக்கு வந்து அறுவடைக்கு தயாராக இருந்தன.

இந்நிலையில், இப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வயல்களில் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் அதில் மூழ்கி விவசாயிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் நெல்கள் முளைத்து விட்டது.

இது குறித்து விஜயபுரத்தை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- தொடர் மழையால் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்தாலும், ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரத்து 500 மட்டுமே வழங்கப்படுகிறது.

ஆனால் ஒரு ஏக்கர் நெல் விவசாயம் செய்ய ரூ.25ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். இந்த ஆண்டு நெற்பயிர்கள் நல்ல விளைச்சலுக்கு வந்தாலும், தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து கூடுதலாக நிவாரண தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News