செய்திகள்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னையில் இங்கிலாந்து விமான சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை- ராதாகிருஷ்ணன்

Published On 2021-01-06 19:57 IST   |   Update On 2021-01-06 19:57:00 IST
சென்னையில் இங்கிலாந்து விமான சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆலந்தூர்:

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து செல்லும் விமானங்களை மத்திய அரசு ரத்து செய்தது. ஆனால் சிறப்பு விமானங்களை மட்டும் அந்தந்த மாநில அரசாங்கத்தின் அனுமதியோடு வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இங்கிலாந்தில் பரவி உள்ள உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் 22-ம் தேதியிலிருந்து இங்கிலாந்துக்கு சிறப்பு விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

பின்னர் கடந்த 6-ந் தேதி முதல் லண்டனுக்கு சிறப்பு விமானங்கள் அந்தந்த மாநில அரசாங்க அனுமதியோடு இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து விமான சேவை இயக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து இங்கிலாந்துக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசு எந்த ஒரு அனுமதியும் அளிக்காததால் சென்னை விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்துக்கு விமான சேவை இயக்கப்படவில்லை.

இதுகுறித்து சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது, ‘‘இங்கிலாந்துக்கு மாநில அரசின் அனுமதியோடு குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.ஆனால் தமிழக அரசு சென்னையிலிருந்து விமான சேவை தொடங்குவதற்காக எந்த ஒரு அனுமதியும் இதுவரையும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய, மாநில அரசு கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும்’’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே ஏர் இந்தியா நிறுவனம் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் மாதம் 24-ந் தேதி வரை புதன்கிழமை தோறும் சென்னையில் இருந்து லண்டனுக்கும், செவ்வாய்க்கிழமை தோறும் லண்டனில் இருந்து சென்னைக்கும் விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News