செய்திகள்
வேலூர் அருகே தனியார் மருத்துவமனை ஆம்புலன்சை திருடிய 2 பேர் கைது
வேலூர் அருகே தனியார் மருத்துவமனை ஆம்புலன்சை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்று கடந்த மாதம் 31-ந் தேதி இரவு திருட்டு போனது. இதுகுறித்து மருத்துவமனை மேலாளர் சிவக்குமார் (வயது 54) அரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், ஒரு கண்காணிப்பு கேமராவில் அரியூர் ஜீவாநகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (23) , விஜய் (24) ஆகியோர் ஆம்புலன்சை திருடி செல்வது பதிவாகியிருந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஆம்புலன்ஸ் மீட்கப்பட்டது.