செய்திகள்
சிறப்பு பிரார்த்தனை பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் நடந்தபோது எடுத்த படம்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Published On 2021-01-02 23:27 IST   |   Update On 2021-01-02 23:27:00 IST
ஆங்கில புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. கீழை நாடுகளின் "லூர்து நகர்" என்று அழைக்கப்படுவதால் வேளாங்கண்ணிக்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் வந்து மாதாவை வழிபட்டு செல்கின்றனர்.

கிறிஸ்தவ ஆலயங்களில் "பசிலிக்கா" என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாக வேளாங்கண்ணி பேராலயம் திகழ்கிறது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் நள்ளிரவு பேராலயத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த சேவியர் திடல் மாநாட்டு பந்தலில் இரவு 10.30 மணியளவில் நன்றி அறிவிப்பு வழிபாடும் 11 மணியளவில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடந்தது.

ஆண்டுேதாறும் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையேற்று திருப்பலி நடத்துவது வழக்கம். ஆனால் அவர் இந்த ஆண்டு கலந்து கொள்ள முடியாத காரணத்தால் பேராலய அதிபர் திருப்பலியை நடத்தினார்.

முன்னதாக பாதிரியார்களின் திருப்பலி ஆயத்த பவனி நடந்தது. பின்னர் 11.30 மணியளவில் பேராலய அதிபர் பிரபாகர் மேடையில் வைக்கப்பட்டிருந்த திருவிளக்கை ஏற்றி ஆங்கில புத்தாண்டு பிறப்பை அறிவித்தார். தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மன்றாட்டுகள் நடந்தது.

புத்தாண்டையொட்டி பேராலயம் அருகில் தியான மண்டபம் செல்லும் சாலை, விண்மீன் ஆலயம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்து. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் அருட்சகோதரர்கள், சகோதரிகள் கலந்து கொண்டனர்.

கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் யாரும் வேளாங்கண்ணி கடற்கரையில ்அனுமதிக்கப்படவில்லை.

நாகப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News