செய்திகள்
திருவண்ணாமலை கலெக்டர்

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மூலதன உதவி, சலுகையுடன் கூடிய கடன் - கலெக்டர் தகவல்

Published On 2021-01-02 19:41 IST   |   Update On 2021-01-02 19:41:00 IST
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மூலதன உதவி, சலுகையுடன் கூடிய கடனுதவி வழங்கப்பட உள்ளதாக, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:

விவசாயிகளை ஒன்றிணைத்து உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளாக உருவாக்கி அவர்களை வேளாண் சாகுபடி மட்டுமல்லாது, வேளாண் வணிகத்திலும் மேம்பட செய்வதில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் வசதி அளித்து தொழில் தொடங்க இடைநிலை மூலதன உதவி, கடன் உத்தரவாதம் மற்றும் சலுகையுடன் கூடிய சுழல் நிதி வழங்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த 3 திட்டங்களையும் ஒருங்கிணைத்து வேளாண் பெருமக்களுக்கு வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு தான் முதல் மாநிலமாகத் திகழ்கிறது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் நிதி ஆதாரம் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

இச்சவால்களை எதிர்கொண்டு உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் லாபகரமானதாக இயங்க வழிவகுக்கும் வகையில் அரசு 3 திட்டங்களை தகுதி வாய்ந்த வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பயன்பெற உருவாக்கி உள்ளது.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை வலுப்படுத்தி வணிக ரீதியாக வளரும் வகையில் இத்திட்டத்தினை 4 ஆண்டுகளில் செயல்படுத்திட தமிழக அரசு ரூ.266 கோடியே 70 லட்சம் ஒப்பளிப்பு செய்துள்ளது.

இத்திட்டத்தினை செயல்படுத்திட வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத்துறை மற்றும் நாப்கிசான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆகஸ்டு மாதத்தில் கையொப்பமிடப்பட்டது. இத்திட்டத்தினை அரசு செயல்படுத்துவதால் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் கடன் உத்தரவாதம் பெற்றிட நிதி நிறுவனங்களை ஊக்குவிக்கவும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மூலதன உதவி மற்றும் சலுகையுடன் கூடிய கடன் வழங்கவும் இயலும்.

மேலும் விவரங்களுக்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மாவட்டத்தின் வேளாண்மை துணை இயக்குனரை (வேளாண் வணிகம்) தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

இந்தத் தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.

Similar News