செய்திகள்
புத்தாண்டு கொண்டாட்டத்தில் அத்துமீறிய 210 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அத்துமீறிய 210 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று அதிகாலை 3 மணி வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடை காரணமாக, புத்தாண்டை கொண்டாடும் வகையில் மோட்டார்சைக்கிளில் அத்துமீறும் இளைஞர்களை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் 58 இடங்களில் தடுப்புகள் கொண்ட சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது.
நள்ளிரவு நேரத்தில் தேவையில்லாமல் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றவர்கள், மதுபோதையில் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களின் மோட்டார் சைக்கிள்கள்களையும் பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று அதிகாலை 3 மணி வரை மாவட்டம் முழுவதும் 210 மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்களின் வாகன ஆவணங்களை சரிபார்த்து, அபராதம் விதித்து வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.