செய்திகள்
கைது செய்யப்பட்ட அன்பரசு.

பவானி அருகே மாணவி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

Published On 2021-01-01 15:22 IST   |   Update On 2021-01-01 15:30:00 IST
பவானி அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பவானி:

பவானியை அடுத்த அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் அன்பரசு (வயது 25). கட்டிட தொழிலாளி. இவர் அந்த பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி அழைத்து சென்றுவிட்டார். பின்னர் அந்த மாணவியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்ேபரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அன்பரசுவை கைது செய்தார்.

ஈரோடு சாஸ்திரிநகர் விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மகன் லோகேஷ் (வயது 22). தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் லோகேசுக்கு தங்கை உறவுமுறையான 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியிடம் பழகி உள்ளார். கடந்த மாதம் அவர் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று உள்ளார்.

சிறுமி மாயமானதை தொடர்ந்து ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட சிறுமியை தேடி வந்தனர்.

இதற்கிடையே சிறுமியுடன் லோகேஷ் ஈரோடு பகுதியில் தங்கியிருப்பதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். மேலும் பிடிபட்ட லோகேசிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், லோகேஷ் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ததுடன், அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேசை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Similar News