செய்திகள்
சிறை தண்டனை

பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவருக்கு 21 ஆண்டு சிறை தண்டனை

Published On 2020-12-30 23:43 IST   |   Update On 2020-12-30 23:43:00 IST
2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
வேலூர்:

வேலூர் தோட்டப்பாளையம் சோளாபுரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (வயது 30), ஆட்டோ டிரைவர். இவர் தனது உறவினர் மகள்களான 7 மற்றும் 9 வயதுடைய 2 பேரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பள்ளிக்கு சென்ற ஒரு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆசிரியர், சிறுமியின் தாயை அழைத்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தாயார் அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டருக்கு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. இதை அறிந்த தாயார் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது சுரேஷ்பாபு என்பதும், அவர் அந்த சிறுமியின் சகோதரியையும் வன்கொடுமை செய்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்பாபுவை கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு வேலூர் சிறப்பு போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் தீர்ப்பு கூறினார். அதில், சுரேஷ்பாபு மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 21 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத்தொகை கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து சுரேஷ்பாபுவை போலீசார் ஜெயிலுக்கு அழைத்துச் சென்றனர்.

Similar News