செய்திகள்
வந்தவாசி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பாட்டி-பேத்தி பலி
வந்தவாசி அருகே மோட்டார் சைக்கிள் மோதி நடந்து சென்ற பாட்டி, பேத்தி பரிதாபமாக இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமம் வாணியசெட்டி தெருவை சேர்ந்த நவாப்ஜான். இவருடைய மனைவி அலிமாபீவி (வயது 70). இவர் தனது பேத்தி பரிதா பானுவுடன் (31) அக்கி எனப்படும் இயற்கை வைத்திய சிகிச்சைக்காக நேற்று காலை சுமார் 9.30 மணி அளவில் வந்தவாசியில் இருந்து வெண்குன்றம் செல்லும் சாலையில் நடந்து சென்றார்.
அப்போது வெண்குன்றம் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அலிமாபீவி, பரிதாபானு ஆகியோர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அதேபோல் மோட்டார் சைக்கிளில் வந்த அருண்குமார், அவரது தம்பி விஜய் என்ற சஞ்சய், தினேஷ்குமார் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அலிமாபீவி, பரிதாபானு ஆகியோர் உயிரிழந்தனர்.
சஞ்சய்(17), அருண்குமார்(18), தினேஷ்குமார்(17) அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சஞ்சய் மற்றும் தினேஷ்குமார் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருண்குமார் சென்னை கிண்டியில் ஐ.டி.ஐ.யும், சஞ்சய் மற்றும் தினேஷ்குமார் வந்தவாசியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2-வும் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.