செய்திகள்
நேதாஜி மார்க்கெட்

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வாடகை வசூலிக்கும் பணி தீவிரம்

Published On 2020-12-23 09:56 GMT   |   Update On 2020-12-23 09:56 GMT
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு வாடகை செலுத்தும்படி தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டது.
வேலூர்:

வேலூர் மாநகராட்சி நிர்வாக வசதிக்காக 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்களில் 1,500 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. கடையை குத்தகைக்கு எடுத்தவர்கள் அந்தந்த மண்டல அலுவலகங்களில் மாதந்தோறும் கடை வரியை செலுத்தி வருகிறார்கள்.

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வியாபாரம் பெரிதளவு பாதிக்கப்பட்டது. வியாபாரிகள் கடை வாடகை செலுத்த முடியாமல் தவித்து வந்தனர். அதனால் தமிழக அரசு 2 மாத கடை வாடகையை தள்ளுபடி செய்தது.

கொரோனா கட்டுபாடுகளில் அளித்த தளர்வு காரணமாக கடந்த 2 மாதங்களாக பொதுமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. ஆனாலும் பெரும்பாலான வியாபாரிகள் கடை வாடகை செலுத்தவில்லை. சிலர் நீண்டகாலமாக வாடகை செலுத்தாமல் உள்ளனர். அவர்களிடம் வாடகை வசூலிக்கும்படி கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் வாடகை வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட நேதாஜி மார்க்கெட்டில் பலமாதங்களாக வாடகை செலுத்தாத 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் வருவாய் ஆய்வாளர்கள் குமரவேல், ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று நேதாஜி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு சென்று வாடகை செலுத்தும்படி கூறினர். மேலும் தண்டோரா மூலம் வாடகையை உடனடியாக செலுத்தும்படியும், இல்லையென்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
Tags:    

Similar News