செய்திகள்
இந்திய கரன்சி

வேலூரில் 4 லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு- வழங்கல் அதிகாரிகள் தகவல்

Published On 2020-12-23 09:51 GMT   |   Update On 2020-12-23 09:51 GMT
வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 969 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்று வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவை அடங்கியிருக்கும். கடந்தாண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்பட்டது.

இந்த நிலையில் வருகிற பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், ஒரு முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி-சேலை ஆகியவை வழக்கம்போல் ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 969 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் அரிசி மற்றும் சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள் என்று மொத்தம் 4 லட்சத்து 23 ஆயிரத்து 680 பேர் உள்ளனர். இவற்றில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 969 அரிசி ரேஷன் அட்டைதாரர்கள். இவர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

வருகிற 4-ந்தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பு வழங்கப்படும். இதற்கான டோக்கனை வீடு, வீடாக ரேஷன் கடை ஊழியர்கள் வினியோகம் செய்வார்கள். அதில், குறிப்பிட்டுள்ள நாளில் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று பொங்கல் பரிசை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
Tags:    

Similar News