செய்திகள்
கரடி

களக்காடு அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை விரட்டிய கரடி

Published On 2020-12-21 15:52 IST   |   Update On 2020-12-21 15:52:00 IST
களக்காடு அருகே தொடர்ந்து கரடிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிங்கி குளத்தில் கடந்த சில மாதங்களாக கரடிகள் நடமாட்டம் காணப்படுகிறது. அங்குள்ள பொத்தையில் தஞ்சம் அடைந்துள்ள கரடிகள் உணவுக்காக அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகலில் ஊருக்குள் சுற்றிய கரடி வனத்துறை ஊழியர் உள்பட 2 பேரை தாக்கியது. அந்த கரடியை வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர். அதன்பின் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய கரடியை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.

இந்நிலையில் நேற்று இரவில் சிங்கிகுளம் அம்மன் கோவில் அருகே கரடி ஒன்று சுற்றி திரிந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீஸ்காரர்கள் கரடியை பார்த்ததும் அதனை விரட்ட முயற்சி செய்தனர்.

ஆனால் கரடி அவர்களை விரட்டியது. இதனால் போலீசார் அருகில் உள்ள ஒரு டீக்கடைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டனர். இதுபற்றி களக்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனடியாக அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் கரடியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அங்குள்ள புதர்கள், மலைகளில் கரடி பதுங்கி உள்ளதா என தேடும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கரடிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Similar News