செய்திகள்
பொள்ளாச்சி வி.ஜெயராமன்

ஜெயலலிதாவின் சபதத்தை நிறைவேற்றுவோம்- பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேச்சு

Published On 2020-12-17 13:58 IST   |   Update On 2020-12-17 13:58:00 IST
ஜெயலலிதாவின் சபதத்தை நிறைவேற்றுவோம் என்று தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.
ஈரோடு:

ஈரோட்டில் மறைந்த முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலைகள் திறப்பு, அ.தி.மு.க. கொடிஏற்று விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். 18 லட்சம் தொண்டர்களுடன் அ.தி.மு.க.வை ஜெயலலிதாவிடம் விட்டுச்சென்றார். அந்த 18 லட்சம் தொண்டர்களை 1½ கோடியாக உயர்த்தியவர் ஜெயலலிதா. வருகிற 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் என்பது ஜெயலலிதாவின் விருப்பத்தை அ.தி.மு.க.வினர் நிறைவேற்றும் சூழலை ஏற்படுத்தி உள்ளது.

தனக்கு பிறகும் நூற்றாண்டு காலம் அ.தி.மு.க. தமிழக மக்களுக்கு சேவை செய்யும், தனக்கு பிறகும் ஆட்சி நூறாண்டு காலம் நடக்கும் என்று சட்டமன்றத்தில் சபதம் ஏற்றார். அந்த நல்ல சபதத்தை நாம் நினைவு கூரவேண்டும்.

சட்டமன்றத்தில் தனது எதிர் திசையில் உட்கார்ந்து இருந்த மு.க.ஸ்டாலினை பார்த்து, ஜெயலலிதா ஒற்றை விரல் காட்டி, நான் அமர்ந்து இருக்கும் இந்த நாற்காலியிலே எனக்கு பிறகும் உங்களை அமர விடமாட்டேன் என்று சபதம் செய்தார். அந்த சபதத்தை நினைவுகூர்ந்து அவரது சபதத்தை நிறைவேற்றுவோம். கழகமே உயிர் மூச்சு, வெற்றியே நமது ஜீவநாடி என்று உழைப்போம், வெற்றி பெறுவோம்.

இவ்வாறு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.

Similar News