செய்திகள்
கைது

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 81 பேர் கைது

Published On 2020-12-15 20:24 IST   |   Update On 2020-12-15 20:24:00 IST
3 வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 81 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண்மை சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் நேற்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..

அதன்படி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஒருங்கிணைப்பு குழுவினர் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், 8 வழி சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு, புதிய விவசாய சங்கம், மக்கள் அதிகாரம் உள்பட பல சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இதற்கு ஆதரவு தெரிவித்து ம.தி.மு.க. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சீனி.கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மின்சார திருத்த சட்டம் 2020-ஐ திரும்ப பெறக் கோரியும், தமிழகத்தில் விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை பாதுகாத்திட வேண்டும் என்றும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து அனுமதியின்றி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக அதில் கலந்து கொண்ட 36 பெண்கள் உள்பட 81 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News