செய்திகள்
கோரிக்கை மனுக்களை பெட்டியில் செலுத்திய பொதுமக்கள்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை பெட்டியில் செலுத்திய பொதுமக்கள்

Published On 2020-12-15 20:14 IST   |   Update On 2020-12-15 20:14:00 IST
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமையான நேற்று பெரும்பாலான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கே மனு அளிக்க வருகை தந்தனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்து வந்தது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று கோரிக்கை மனுக்களை அதிகாரிகளை நேரில் சந்தித்து அளிக்க வருகை தந்தனர்.

பொதுமக்கள் மனுக்களை அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதை தவிர்த்து அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்களில் வைக்கப்படும் பெட்டியில் கோரிக்கை மனுக்களை செலுத்துமாறு மாவட்ட நிர்வாகம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் திங்கட்கிழமையான நேற்று பெரும்பாலான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கே மனு அளிக்க வருகை தந்தனர். அவர்கள் அலுவலக நுழைவு வாயில் அருகில் வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் மனுவை செலுத்தினர். தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் ஒருசிலர் மட்டுமே மனு அளித்தனர்.

இதேபோல் வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் மனுக்கள் போடுவதற்காக தனி பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தாசில்தார்கள் திருநாவுக்கரசு, நரேந்திரன் ஆகியோர் பொதுமக்கள் மனுக்கள் போடுவதை தொடங்கி வைத்தனர். இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்து கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News