செய்திகள்
சஸ்பெண்டு

திமுக போராட்டத்தில் பங்கேற்ற கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்டு

Published On 2020-12-14 15:13 IST   |   Update On 2020-12-14 15:13:00 IST
திமுக போராட்டத்தில் பங்கேற்ற கிராம நிர்வாக அலுவலரை சஸ்பெண்டு செய்து ஆர்.டி.ஓ உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சோளசிராமணி அருகே உள்ள பொன்னம் பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்(வயது42). இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகா புஞ்சைகாளமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கணபதிபாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 24-ந் தேதி பரமத்தி வேலூர் தி.மு.க. எம்.எல்.ஏ.மூர்த்தியை சந்தித்து தி.மு.க.வில் இணைந்து அக்கட்சி நடத்திய போராட்டத்தில் பங்கேற்றதாக புகார் எழுந்தது. மேலும் போராட்டத்தில் பங்கேற்ற போட்டோக்களை மோகன்ராஜ் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் பதிவிட்டார்.

இதை பார்த்த சிலர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் இது குறித்து விசாரணை நடத்த கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். இது குறித்து மொடக்குறிச்சி தாசில்தார் சங்கர்கணேஷ் விசாரணை நடத்தி ஆர்.டி.ஓ சைபுதீனிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜை சஸ்பெண்டு செய்து ஆர்.டி.ஓ உத்தரவிட்டுள்ளார். மோகன்ராஜிடம் அவர் தரப்பு கருத்தை கூற விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர் விளக்கம் அளித்த பிறகு அடுத்த நடவடிக்கை குறித்து தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News