செய்திகள்
தற்கொலை

ஈரோட்டில் திருமணமான 3 மாதத்தில் நகைக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2020-12-14 08:10 IST   |   Update On 2020-12-14 08:10:00 IST
ஈரோட்டில் திருமணமான 3 மாதத்தில் நகைக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:

ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் சரவணன் (வயது 30). இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு பெற்றோர் கீர்த்தி (27) என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு முன்பு சண்முகம் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து சரவணனுக்கு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே மணிக்கூண்டு பகுதியில் நகைக்கடை வைத்து கொடுத்தார்.

கடந்த சில வாரங்களாக சரவணன் தனது தந்தையிடம் தொழிலை விரிவு படுத்துவதற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு சண்முகம், ‘தற்போது தன்னிடம் பணம் இல்லை, பணம் வந்ததும் தருகிறேன், அதுவரை இருக்கும் தொழிலை கவனி’ என்று கூறி உள்ளார்.

இந்த நிலையில் சரவணன் சம்பவத்தன்று தனது தந்தையிடம் பணம் வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் சண்முகம் பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த சரவணன், தனது தந்தை கண் முன்னே விஷம் குடித்தார்.

இதைப்பார்த்த சண்முகம் மற்றும் அக்கம் பக்கத்தினர் சரவணனை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சரவணன் இறந்தார். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Similar News