செய்திகள்
துருகம் கிராமத்தில் நெசவுத்தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை
துருகம் கிராமத்தில் நெசவுத்தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகில் உள்ள துருகம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் நந்தகுமார் (வயது 35), நெசவுத்தொழிலாளி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவி ஞானசவுந்தரியை நந்தகுமார் கடந்த 9-ந்தேதி பிரசவத்துக்காக வேலூர் பாகாயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு, அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
அதைத்தொடர்ந்து 11-ந்தேதி நந்தகுமாரின் சித்தப்பா திடீரென இறந்து விட்டார். அவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த நந்தகுமார், மதியம் 2 மணியளவில் கதவை திறந்துள்ளார். ஆனால் கதவை திறக்க முடியவில்லை. இதனால் வீட்டின் பின் பக்க கதவை திறக்கச் சென்றார். பின் பக்க கதவை யாரோ கடப்பாரையால் உடைத்து திறந்திருப்பது தெரிய வந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் பீரோவில் வைத்திருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. 20 பவுன் நகை, ரூ.15 ஆயிரத்தை மர்மநபர்கள் யாரோ கொள்ளையடித்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர், கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் நாராயணன், விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் சுரேஷ் கைரேகையை பதிவு செய்தார். மோப்ப நாய் ‘மியா’ வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்தவாறு ஓடியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.