பால் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு- முறைகேட்டில் ஈடுபட்ட 3 பணியாளர்கள் மீது நடவடிக்கை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள களம்பூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட 6 பால் கொள்முதல் மையங்களில் திருவண்ணாமலை கூட்டுறவு துணைப் பதிவாளர் விஷ்வேஸ்வரன் தலைமையில் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) சந்தீப், ஆரணி சரக முதுநிலை ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 3 பால் கொள்முதல்பணியாளர்கள் சங்கத்தில் கொடுக்கப்பட்ட பால் அளவை லிட்டர்செட்டை பயன்படுத்தாமல் கூடுதல் அளவு பிடிக்கும் லிட்டர் செட்டை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து 3 முறை நடைபெற்ற ஆய்வின் போதும் அவர்கள் இவ்வாறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட பால் கொள்முதல் பணியாளர்கள் 3 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சங்க நிர்வாகிகளிடம் அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.
பால் கொள்முதல் பணியாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது பால் வழங்கும் விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.