செய்திகள்
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த மேலும் 6 பேர் கைது
திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையை சேர்ந்த மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை காந்திநகர் 3-வது தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பங்க்பாபுவை (வயது 47) கடந்த 3-ந் தேதி அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் வைத்து மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியது.
பங்க் பாபு கடந்த 2017-ம் ஆண்டு திருவண்ணாமலை நகர அ.தி.மு.க. முன்னாள் செயலாளராக இருந்த கனகராஜ் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி ஆவார். இதனால் பழிக்கு பழியாக இச்சம்பவம் நடந்து இருக்குமோ என்று திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இந்த கொலை சம்பவம் பழிக்கு பழியாக கூலிப்படையை வைத்து நடத்தியது உறுதி செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக கூலிப்படையை ஏவிய கனகராஜின் மனைவி, மாமியார், மைத்துனர் மற்றும் உறவினர், நண்பர்கள் என 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கூலிப்படையினருக்கு பணம் பட்டுவாடா செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கூலிப்படையை சேர்ந்தவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கூலிப்படையை சேர்ந்த வேலூர் அரி (23), ராமு (26), பிரதீப்குமார் (18), குருவி என்கிற சுரேஷ் (33), விவின்(36), சென்னையை சேர்ந்த வினோத் என்ற மூசா (27) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.