செய்திகள்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் - பாலகிருஷ்ணன்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறினார்.
கொள்ளிடம்:
நாகை மாவட்டம் கொள்ளிடம், ஆச்சாள்புரம், ஆலாலசுந்தரம், வேட்டங்குடி, வழுதலைகுடி உள்ளிட்ட பல கிராமங்களில் அழுகும் நிலையில் உள்ள சம்பா நெற்பயிரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
நிவாரணம் வழங்க வேண்டும்
தொடர் கனமழை காரணமாக நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் குறிப்பாக ஆச்சாள்புரம், ஆலாலசுந்தரம், வேட்டங்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது.
தமிழக அரசு எவ்வளவு நிவாரணம் அறிவிக்க போகிறது என்பதை இன்னும் சொல்லவில்லை. வீடு இடிந்தவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப் போவதாக கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக தெரிகிறது. வீடு இழந்தவர்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும்.
எல்லா வடிகால் வாய்க்கால்களையும் தூர்வார புதிய ஆலோசனைகளை உருவாக்கி அதிக மழையின் போது தண்ணீர் வடிய நிரந்தரமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
உடனடியாக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு நிவாரணமாக ரூ.30 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும். சராசரியாக கணக்கு பார்க்காமல் முழு நஷ்டத்தையும் வழங்க வேண்டும். விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள கடனை அரசே வழங்கி விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
எல்லா பழைய தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிய தொகுப்பு வீடுகளை கட்டி் தரவேண்டும். ஊரடங்கு தளர்வுகள் என்று அறிவித்து சென்னை புறநகர் பகுதிகளில் மின்சார ரெயிலில் பயணம் செய்ய பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
பஸ்களில் 100 சதவீத பயணம் செய்யும் போது வராத இந்த கொரோனா ரெயில் பயணத்தில் மட்டும் எப்படி வரும்? சாதாரண ஏழை எளிய மக்கள் தான் ரெயில் பயணத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் மக்கள் பெரிய பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே தமிழக அரசும், தென்னக ரெயில்வே நிர்வாகமும் சகஜ நிலைக்கு ஆளாகி 100 சதவீத ரெயில் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவா் கூறினார்.
மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலன், வட்ட செயலாளர் ஜீவானந்தம், செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கேசவன், துரையரசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.