செய்திகள்
மயிலாடுதுறை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
மயிலாடுதுறை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே கோமல் கீழத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சசிகுமார் (வயது 30). இவர் மயிலாடுதுறை சித்தர்காடு மெயின் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 3 பேர் சசிகுமார் கையில் வைத்திருந்த கைப்பையை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சசிக்குமார் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவந்து அந்த 3 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். மர்ம நபர்கள் பறித்து சென்ற கைப்பையை பறிமுதல் செய்து சசிகுமாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அந்த கைப்பையில் இருந்த ரூ.2 ஆயிரம் அப்படியே இருந்தது. பின்னர் அந்தபகுதி மக்கள் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிடித்து வைத்திருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நீடூர் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஷாஜகான் (46), நீடூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நூருல்அமீன் (35), அதே பகுதியை சேர்ந்த யாகூப் மகன் ஹாலிக் (32) என்பதும், இவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.