செய்திகள்
சின்னமேடு மீனவ கிராமத்தில்கடல் அலையால் அடித்து செல்லப்பட்ட சாலை
திருக்கடையூர் அருகே சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அலையால் அடித்து செல்லப்பட்ட சாலையை சீரமைக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே காலமநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னமேடு மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் பைபர் படகு மற்றும் கட்டுமரங்கள் மூலம் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தால் கரைப்பகுதி அடிக்கடி அரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் கரையோர வீடுகள் மற்றும் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் சின்னமேடு கிராமத்தில் கடல் சீற்றத்தால் கரையில் அரிப்பு ஏற்பட்டு கடற்கரையோரம் போடப்பட்ட கான்கிரீட் சாலையை கடல் அலை அடித்து சென்றது.
மேலும் இதனால் படகுகளை கரையோரம் நிறுத்தி வைக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் மேற்கண்ட இடங்களை உடனடியாக பார்வையிட்டு கடல் அரிப்பினால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.