செய்திகள்
தற்காலிக குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி நாகையில், பொதுமக்கள் சாலை மறியல்
தற்காலிக குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி நாகையில், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை கோட்டை வாசல்படி அருகே நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் நாகை, நாகூர் சுற்றுவட்டார பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குப்பைகளை தரம் பிரிக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக புது ஆர்ச் சுடுகாடு அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக குப்பை கிடங்கு செயல்படுகிறது. தற்போது இங்கு குப்பைகள் கொட்டப்படுகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாகை புது ஆர்ச் அருகே மெயின் ரோட்டில் அமர்ந்து மரக்கட்டைகளை போட்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். இங்கு குப்பைகள் கொட்டப்படுவதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. அதில் ஏற்படும் புகை மூட்டத்தின் காரணமாக மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச நோய்கள் ஏற்படுகிறது.
மேலும் குப்பை லாரிகள் அதிகவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. ஒரு மாதம் மட்டும் தற்காலிகமாக குப்பை கிடங்கு செயல்படும் என தெரிவித்து விட்டு கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் குப்பைக்கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குடியிருப்பு பகுதியில் வசிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே இந்த தற்காலிக குப்பை கிடங்கை மீண்டும் பழைய இடத்துக்கோ? அல்லது வேறு இடத்திற்கோ? மாற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகை அருகே சிக்கல் கிராமத்தில் அரசு வேளாண் அறிவியல் நிலையம் உள்ளது. இந்த வேளாண் நிலையத்திற்கு சொந்தமாக 50 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. வேளாண் அறிவியல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் உள்ள சிக்கல் ஊராட்சி மோழித்திடலில் 40-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வசித்து வந்தவர்களுக்கு ஆவராணி ரோடு பகுதியில் புதிதாக இடம் கொடுக்கப்பட்டு அதில் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையினால் சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு சொந்தமான வயல்களில் தேங்கிய மழைநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது. இதை சீர் செய்து வயல்களில் இருந்து தண்ணீர் குடியிருப்பு பகுதியில் புகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிக்கல் - பாலக்குறிச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார், சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதைதொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தில் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.