செய்திகள்
சினேகா

வந்தவாசி அருகே குளிக்க சென்ற பள்ளி மாணவி ஏரியில் மூழ்கி பலி

Published On 2020-12-05 08:35 GMT   |   Update On 2020-12-05 08:35 GMT
வந்தவாசி அருகே உறவினர் வீட்டுக்கு வந்திருந்த மாணவி ஏரியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பலியானார். 3 பேர் உயிருடன்மீட்கப்பட்டனர்.
வந்தவாசி:

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் நீலமேகம். இவரது மகள் சினேகா (வயது 16). பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சேத்துப்பட்டு கிராமத்தில் உள்ள தனது சித்தப்பா வெங்கடேசன் வீட்டிற்கு வந்திருந்தார்.

இந்த நிலையில், தனது உறவினர்களான, ரவீந்திரநாத் மகன் கிரீஷ் (5), மகள் நிகிதா (2½), வெங்கடேசன் மகள் மதுஸ்ரீ (14) ஆகியோருடன் அருகில் உள்ள ஏரியில் குளிக்கச்சென்றுள்ளார். தற்போது பெய்த பலத்த மழைகாரணமாக ஏரியில் தண்ணீர் அதிகமாக உள்ளது. 4 பேரும் தண்ணீரில் இறங்கி குளித்துள்ளனர்.

அப்போது சினேகா ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாகவும், மண் எடுத்த பள்ளத்தில் நீரில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது. இதை பார்த்த மற்ற 3 பேரும் சினேகா மூழ்கிய பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் அவர்களும் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் 4 பேரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்தில் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சினேகா இறந்துவிட்டது தெரியவந்தது. மதுஸ்ரீ, நிகிதா, கிரீஷ் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தாசில்தார் திருநாவுக்கரசு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து வந்தவாசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். உறவினர் வீட்டுக்கு வந்த பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News