செய்திகள்
கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
அரியலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தில் நடுத்தெருவில் ஓம்சக்தி கோவில் உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் கோவிலுக்கு சென்று அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியினர் கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது போலீசார், புகார் மனுவை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அப்பகுதியினர் தொடர்ந்து உண்டியல் திருட்டு குறித்து புகார் அளித்ததால் புகார் மனுவை வாங்கியுள்ளனர். ஆனால் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், இந்த கோவிலில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பும் உண்டியல் திருட்டு நடந்தது. அதற்கும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதும் திருட்டு நடந்துள்ளது. இந்த உண்டியலில் ரூ.60 ஆயிரத்திற்கும் மேலான தொகை இருந்திருக்கும். எனவே உடனடியாக இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.