செய்திகள்
கோப்புபடம்

அரியலூர் அருகே கிராம நிர்வாக அலுவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

Published On 2020-12-03 15:33 IST   |   Update On 2020-12-03 15:33:00 IST
மது அருந்தி விட்டு பொதுமக்களிடம் தகாத வார்த்தையில் பேசிய கிராம நிர்வாக அலுவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரியலூர்:

பெரம்பலூர் மாவட்டம் வரகுபாடி கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 30). இவர் அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். புருஷோத்தமனும், அவரது நண்பரும், காமரசவல்லி கிராம நிர்வாக அலுவலரான சிவராஜனும் (27) நேற்று முன்தினம் பெரியநாகலூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.

அப்போது அவர்கள் 2 பேரும் பொதுமக்களிடம் தகாத வார்த்தையில் பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர்களான புருஷோத்தமன், சிவராஜன் ஆகியோரை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டிவிட்டு, போலீசார், வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் 2 பேரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கிடையே அங்கு வந்த போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் 2 பேரையும் மீட்டு அழைத்து சென்றனர். இந்நிலையில் மது அருந்திவிட்டு பொதுமக்களை தகாத வார்த்தையில் பேசிய கிராம நிர்வாக அலுவலர்கள் புருஷோத்தமன், சிவராஜன் ஆகிய 2 பேரை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னாவின் அதிரடி உத்தரவின் பேரில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜோதி பணியிடை நீக்கம் செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News