செய்திகள்
சோலார் பேனல்

வீட்டில் சோலார் பேனல் அமைத்தால் 40 சதவீத மானியம்- மின்துறை அதிகாரி தகவல்

Published On 2020-12-02 06:12 GMT   |   Update On 2020-12-02 06:12 GMT
புதுச்சேரியில் வீட்டில் சோலார் பேனல் அமைத்தால் 40 சதவீத மானியம் வழங்கப்படும் என மின்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி அரசு மின்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டின் கூரையின் மீது மின்கம்பி கட்டமைப்போடு இணைந்த சூரிய ஒளி மின் உற்பத்தி கலன் (சோலார் பேனல்) அமைத்து சுய தேவைக்கோ அல்லது விற்பதற்கோ மின் உற்பத்தி செய்து கொள்ளலாம். இதற்கு தேவையான தொழிற்நுட்ப உதவியை புதுவை மாநில அரசும், மத்திய அரசும் வழங்க தயாராக உள்ளது.

1 கிலோ வாட் முதல் 110 கிலோ வாட் வரை உள்ள திறன் கொண்ட கூரை மீதான சோலார் பேனல்களை அமைக்கலாம். 1 கிலோ வாட் மின் திறன் கொண்ட சோலார் பேனல் அமைப்பதற்கு 10 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிழல் படியாத இடம் தேவைப்படுகிறது. இதன் மூலம் மாதம் சராசரியாக 135 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து, மாதம் ரூ.300 சேமிக்கலாம்.

1 கிலோ வாட் மின்திறன் கொண்ட சோலார் பேனல் அமைக்க ரூ.42 ஆயிரம் செலவாகும். இதில் 40 சதவீத மானியம் தோராயமாக ரூ.16,800 மத்திய அரசு வழங்குகிறது. இதனால் பயனாளர்கள் ரூ.25,200 செலுத்தி முறையாக பராமரித்தால் சோலார் பேனல் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்தரும். இதில் செய்யப்படும் முதலீடு 7 வருடத்தில் திரும்பப்பெறும்பட்சத்தில் மீதமுள்ள பயனீட்டு காலங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் முதலீடு இல்லா மின்சாரமாக கிடைக்கும்.

சோலார் பேனல்கள் அனுமதிக்க பெற்ற தொழில்நுட்பத்துடனும் தரத்துடனும் அமைக்க வேண்டி மற்றும் குறைந்த விலையில் நிர்ணயிக்கும் பொருட்டு மின்துறையால் மின் அமைப்பு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சோலார் பேனல் அமைத்து அதனை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தபிறகே மத்திய அரசால் வழங்கப்படும் மானியத்தொகை நேரடியாக ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News