செய்திகள்
ஓஎன்ஜிசி நிறுவனத்தை முற்றுகையிட வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை முற்றுகையிட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முயற்சி

Published On 2020-12-01 15:56 IST   |   Update On 2020-12-01 15:56:00 IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டச்சேரி அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இயங்கி வருகிறது. ஓ.என்.ஜி.சி.நிறுவனம் இதை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். ஓ.என்.ஜி.சி. நிறுவன காலிப்பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு தகுதிக்கேற்ப பணி வழங்க வேண்டும்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை சுற்றியுள்ள கிராமங்களில் மழையால் சேதமடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும். திட்டச்சேரி-குத்தாலம் இடையே சேதமடைந்த இணைப்பு பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன், திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன் ஆகியோர் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை முற்றுகையிட முயன்றனர். இதில் மாவட்ட அமைப்பாளர் முத்துவளவன், இஸ்லாமிய பேரவை மாவட்ட அமைப்பாளர் மஞ்சக்கொல்லை ஹாஜா, மாவட்ட ஊடக அமைப்பாளர் வைரமுத்து, ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் அரவிந்த் வளவன், ஒன்றிய வணிகர் அணி அமைப்பாளர் சக்திவேல், ஒன்றிய நிர்வாகிகள் நளமகாராஜா, சக்திவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள், குத்தாலம் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதை தொடர்ந்து திருமருகல் வருவாய் அலுவலர் பொற்கொடி, நாகை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மற்றும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் எனவும், நாளை(செவ்வாய்க்கிழமை) தாசில்தார் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தனர். இதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Similar News