செய்திகள்
மழைநீரை வடிய வைப்பதற்காக சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்ட போது எடுத்த படம்

நிவர் புயலால் கனமழை- வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை வடிய வைக்கும் பணி தீவிரம்

Published On 2020-11-28 09:44 GMT   |   Update On 2020-11-28 09:44 GMT
நிவர் புயலால் கனமழை பெய்தது. இதையொட்டி கடலூரில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை வடிய வைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்:

தமிழகம் மற்றும் புதுச்சேரியை அச்சுறுத்திய நிவர் புயல் கடந்த 25-ந் தேதி மரக்காணம் அருகே கரையை கடந்தது. இருப்பினும் கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டியது. இந்த காற்றினால் மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன. கால்நடைகளும் பலியாகின. விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல், வாழை, மணிலா, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் தண்ணீர் தேங்கியது.

சில இடங்களில் வாழை முறிந்து சேதமடைந்தன. இது தவிர பலத்த மழையால் வீடுகளை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக புதுப்பாளையம், கோண்டூர், பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், முதுநகர் ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் இருந்த வீடுகளில் மழைநீர் புகுந்தது. இந்த தண்ணீரை பொதுமக்கள் வாளியை வைத்து இறைத்து வெளியேற்றினர்.

இதற்கிடையில் நேற்று முன்தினமும், நேற்றும் மழை ஓய்ந்து வெயில் அடித்து வருவதால் சாலைகளில் தேங்கி நின்ற மழைநீர் அனைத்தும் வடிந்து விட்டது. ஆனால் தாழ்வான இடங்களில் தேங்கி நின்ற மழைநீர் வடியவில்லை. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கவுசல்யாநகர், ஸ்ரீதேவிநகர், குமரன்நகர், முருகாலயா நகர், பொன்னுசாமிநகர், சக்திநகர், சிவாநகர், சிங்காரவேலன் நகர், முத்தையாநகர் உள்பட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதை மோட்டார் மூலம் இறைத்து நகராட்சி ஊழியர்கள் வெளியேற்றி வருகின்றனர். மேலும் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி உத்தரவின்பேரில் உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் ஊழியர்கள் ஸ்ரீதேவிநகரை சுற்றியுள்ள தண்ணீரை வடிய வைக்க சாலையை குறுக்கே வெட்டி, அதில் குழாய் அமைத்து மழைநீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் தண்ணீரை வடிய வைக்க முடியவில்லை. அந்த இடங்களில் மாற்று ஏற்பாடு செய்து வடிய வைக்க அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் தாழ்வான இடங்களில் தேங்கி உள்ள மழைநீரை வடிய வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News